அரசியல் கட்சிகள் சமூக ஊடகத்தில் விளம்பரம் செய்வதற்கு முன் அனுமதி பெறவேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டப்பேரவை பொதுத் தேர்தல், 6 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 8 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிக்கையை 2025 அக்டோபர் 6 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டது. சமூக ஊடகம் உட்பட மின்னணு ஊடகத்தில் வெளியிடுவதற்கான அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன்னதாக சான்றிதழ் பெறுவதற்கு ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனைத்து பதிவு செய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் போட்டியிடும் வேட்பாளர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்று 2025 அக்டோபர் 9 அன்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
உரிய வழிகாட்டுதலுக்கு ஏற்ப அரசியல் விளம்பரங்களின் முன் சான்றளிப்புக்காக மாநிலம் மற்றும் மாவட்ட அளவில், ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவின் முன் சான்றிதழ் இன்றி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்தவொரு இணையதளம் அடிப்படையிலான ஊடகம் மற்றும் இணையதளங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிடக் கூடாது. ஊடகத்தில் பணம் பெறப்பட்டு செய்தி வெளியிடப்பட்டது தெரியவந்தால் அது குறித்து கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்போது வேட்பாளர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 77(1)-ன் படியும், உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படியும் சமூக ஊடக இணையதளங்கள் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்கான செலவு குறித்த விவரங்களை சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள் அரசியல் கட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும்.