தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2026 ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த ரொக்கப் பரிசோடு சேர்த்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, வேட்டி மற்றும் சேலை ஆகியவையும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏறக்குறைய ரூ.10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான அறிவிப்பை இந்த மாதம் இறுதியில் அரசு வெளியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. வேட்டி சேலை மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு ஆகியவற்றை டோக்கன் அடிப்படையில் வழங்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு, நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அரசு ரொக்கப் பரிசு வழங்குவதை தவிர்த்தது, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உருவாக்கியது. இந்த நிலையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ரொக்கப் பரிசுடன் கூடிய இந்த அறிவிப்பு வெளியாவது, வாக்குகளை கவரும் ஒரு அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் திட்டம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.
Read more: தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடித்தால் இத்தனை நன்மைகளா..? நோட் பண்ணுங்க..!



