பிரபல யூடியூபராக வலம் வருபவர் மாரிதாஸ்.. மதுரையை சேர்ந்த இவர் வலதுசாரி ஆதரவாளர் ஆவார்.. இவர் சமீபகாலமாக முதல்வர் விஜய், தவெக அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏக்கள் ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்து வீடியோ வெளியிட்டு வந்தார்.. எனினும் இவர் ஏஐ மூலம் வீடியோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவதாக தவெகவினர் குற்றம்சாட்டி வந்தனர்..
இந்த நிலையில் தமிழக அரசையும் முதல்வர் விஜய்யையும் விமர்சனம் செய்ததற்காக யூடியூபர் மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டார்.. மதுரையில் உள்ள மாரிதாஸ் வீட்டுக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட சைபர் கிரைம் போலிசார் இன்று அவரை கைது செய்தனர்.. அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டதாக கூறப்படுகிறது..
மாரிதாஸின் கைது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.. தவெக ஆட்சியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் கடுமையாக சாடி வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன..
அதிமுக ஐடி விங் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் “ யூட்யூபர் திரு. மாரிதாஸ் அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute… ஆட்சி மாறி விட்டதோ? ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்? பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா? நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…
What bro… It’s very wrong bro..!! அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் அமலாக்கத்துறையால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
ஆதவ் அர்ஜூனா அவர்களே… ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்? அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா? ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளது..
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தவெகவின் “ரீல்ஸ் மாடல்” அரசின் ரியல் முகத்தை மக்களுக்கு விளக்கிக் கூறிய ஒரே காரணத்திற்காக சமூக ஊடகவியலாளர் திரு. மாரிதாஸ் அவர்களை தடாலடியாக கைது செய்திருக்கும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் அராஜகம் கடும் கண்டனத்திற்குரியது. தங்கள் நிர்வாகத்தின் மீதான சாதாரண விமர்சனங்களைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் இப்படி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவது தான் தவெக முன்மொழிந்த மாற்று அரசியலா?
ஆட்சி மாறினாலும் அவலங்கள் மாறவில்லை என்பதை போல, திமுகவிற்கு மாற்று சக்தி என்று கூறி மக்கள் மனதைக் கலைத்து ஆட்சிக்கு வந்து விட்டு, பொதுமக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெறிப்பதில் திமுகவை விட தவெக அசுர வேகத்தில் செயல்படுவது வெட்கக்கேடானது. எனவே, கைது செய்யப்பட்ட திரு. மாரிதாஸ் அவர்களை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
திமுகவைப் போலவே காவல்துறையை தங்கள் கைக்கூலிகளாகப் பயன்படுத்தி, பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தை அபகரிக்க தவெக அரசு முயல்வதை தமிழக பாஜக ஒருபோதும் அனுமதிக்காது! ” என்று தெரிவித்துள்ளார்..
அதே போல் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் மாரிதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தற்போதைய TVK அரசாங்கத்தின் முறைகேடுகள் மற்றும் தோல்விகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் திரு. மாரிதாஸ் அவர்களின் கைது நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேள்வி கேட்கும் குரல்களை ஒடுக்குவது ஜனநாயகத்தின் மாண்புக்கு எதிரானது.
குறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவர்களைக் குறிவைப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்; அத்துடன் அவர்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இருப்பினும், பெண்கள் குறித்து எவ்விதமான தரக்குறைவான கருத்துகளையும் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பொது வாழ்வில் அனைவரும் கண்ணியத்துடனும் நாகரிகத்துடனும் பெண்மையை மதிக்க வேண்டும். ஒரு பெண் தலைவராக, நான் எப்போதும் பெண்களின் உரிமைகளுக்காகவும் கண்ணியத்திற்காகவும் உறுதியாக நிற்பேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : முதுகில் குத்திய காங்கிரஸ்.. ராகுலை விமர்சித்து உதயநிதி போட்டோவுடன் டெல்லியில் பேனர்..!



