இந்தியாவில் வறுமை குறைந்துவிட்டதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும், மக்களின் வாழ்வாதாரச் சிரமங்கள் ஏன் இன்னும் குறையவில்லை என்பது குறித்து ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய தரவுகள் விவரிக்கின்றன. வறுமைக் கோட்டைத் தாண்டுவதும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்வதும் ஒன்றல்ல என்பதை இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இருப்பினும், நாட்டின் பல பகுதிகளில் அடிப்படை வசதிகளின்றி லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுவதும், வறுமைக்கோட்டிற்கு அருகில் உள்ள நடுத்தர மக்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் வறுமைக்குள் தள்ளப்படலாம் என்ற ஆபத்தில் இருப்பதும் இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவந்துள்ளது.
இந்தியா” (Poverty and Equity Brief: India)-ன் படி, 2011-12 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் 57.7 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 4.20 டாலர் வருமானம் கொண்ட வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்தனர். இந்த எண்ணிக்கை 2023-24 ஆம் ஆண்டில் 16.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2026-ல் இது 14.2 சதவீதமாகவும், 2028-ல் 12.1 சதவீதமாகவும் குறையும் என்று உலக வங்கி மதிப்பிடுகிறது. அதாவது, சுமார் ஒரு தசாப்த காலத்தில், மக்கள் தொகையில் 41.6 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்.
உலக வங்கியின் திருத்தப்பட்ட சர்வதேச வறுமைக் கோட்டின்படி (ஒரு நாளைக்கு 3 டாலர் வருமானம்), இந்தியாவில் தீவிர வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2022-23 ஆம் ஆண்டில் 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதன் பொருள், சுமார் 270 மில்லியன் மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்பதாகும்.
வறுமை குறைப்பு பற்றிய அரசின் வாதங்களுக்கு அடிப்படையாக விளங்கும் உலக வங்கி மற்றும் நிதி ஆயோக் தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு மேலே கொண்டுவரப்பட்டுள்ளனர். இருப்பினும், முறையான வருமானம், பணவீக்கம் மற்றும் அடிப்படை வசதிகளின் தாக்கம் குறித்துப் பொருளாதார நிபுணர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.
‘காலமுறை தொழிலாளர் படை ஆய்வு’ (Periodic Labour Force Survey)-ன் படி, இந்தியாவில் தொழிலாளர்-மக்கள் தொகை விகிதம் 2017-18-ல் 46.8 சதவீதத்திலிருந்து 2023-24-ல் 58.2 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, ஆனால் வருமானம் உயரவில்லை.
உலக வங்கியின் தரவுகளின்படி, வழக்கமான ஊதியம் பெறும் பணியாளர்களின் பணவீக்கத்திற்கு சரிசெய்யப்பட்ட தினசரி வருமானம், 2017-18 மற்றும் 2023-24 ஆகிய இரு ஆண்டுகளிலும் ₹381 என்ற அளவிலேயே மாறாமல் உள்ளது. சுயதொழில் செய்பவர்களின் வருமானம் ₹246-லிருந்து ₹242-ஆகக் குறைந்துள்ளது. தினக்கூலி பணியாளர்களின் வருமானம் மட்டுமே ₹189-லிருந்து ₹227-ஆக உயர்ந்துள்ளது.
ஒருபுறம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ந்து வருகிறது, சந்தைகளும் செழித்து வருகின்றன. மறுபுறம், ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ₹381 வருமானம் ஈட்டிய ஒரு நபர், இன்றும் அதே ₹381-ஐத்தான் ஈட்டிக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில், உணவு, பள்ளிக் கட்டணம், மருத்துவம் மற்றும் வீட்டு வாடகை ஆகியவை அதிக விலை கொண்டவையாக மாறியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கைகளின்படி, ஏழை குடும்பங்களின் நுகர்வுச் செலவில் 45 முதல் 50 சதவீதம் வரை உணவு மற்றும் எரிபொருளுக்கே செலவிடப்படுவதால், இவற்றின் விலை உயர்வு அவர்களைத்தான் கடுமையாகப் பாதிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, ஏழை குடும்பங்கள் முதலில் உணவுக்கான செலவைக் குறைக்கின்றன; அதன் பிறகு மருத்துவச் செலவுகளையும், இறுதியாகத் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவையும் குறைக்கின்றன. இதிலிருந்து, வறுமைக் கோட்டிற்கு மேலே வருவதும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதும் ஒன்றல்ல என்பது தெளிவாகிறது.
வருமானமும் விலைவாசி உயர்வும் ஒருபுறமிருக்க, நாட்டின் முறைசாராத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானத்திலேயே தவித்து வருகின்றனர். குறைந்த ஊதியம், வேலைவாய்ப்பின்மை மற்றும் போதிய சேமிப்பு இல்லாததே வறுமைக் குறைப்புக்கும் மக்களின் உண்மையான சிரமங்களுக்கும் இடையிலான முரண்பாட்டிற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
நாட்டின் தொழிலாளர்களில் சுமார் 90 சதவீதம் பேர், அதாவது 40 முதல் 50 கோடி பேர், அமைப்புசாரா துறையில் பணிபுரிகின்றனர். இவர்களில் பத்து பேரில் ஒன்பது பேருக்கு வேலை உத்தரவாதம், ஓய்வூதியம் அல்லது காப்பீடு போன்ற எந்தப் பாதுகாப்பும் இல்லை.
‘இ-ஷ்ரம்’ (e-Shram) இணையதளத்தின் தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட 31 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரா தொழிலாளர்களில் 94.11 சதவீதம் பேரின் மாத வருமானம் ₹10,000-க்கும் குறைவாகவே உள்ளது. அதாவது, வறுமைக் கோட்டிற்கு மேலே இருப்பவர்கள் கூட ₹10,000-க்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு குறைந்த வருமானத்தில் தரமான கல்வி, முறையான மருத்துவ வசதி மற்றும் சேமிப்பு என்பது சாத்தியமற்றது.
பொருளாதார ஆய்வறிக்கை 2025-26-ன் படி, நாட்டில் உள்ள ‘கிக்’ (gig) தொழிலாளர்களில் (தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள்) சுமார் 40 சதவீதம் பேர் மாதம் ₹15,000-க்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர். 2021 முதல் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் இத்தகைய தொழிலாளர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்திருந்தாலும், அவர்களில் பெரும்பாலோர் இன்னும் வறுமைக் கோட்டிற்கு கீழே அல்லது மிகக் குறைந்த வருமான நிலையிலேயே உள்ளனர்.
இந்தியாவில் வறுமைக்கு மிக முக்கியக் காரணம் வாழ்க்கைத் தரத்துடன் தொடர்புடைய வசதிகள் கிடைக்கப்பெறாததுதான்; இது வறுமைக்கான காரணங்களில் சுமார் 40 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.



