கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமான வடகிழக்கு பருவமழை நாட்கள் செல்ல, செல்ல தீவிரமடைந்து கொண்டே வருகின்றது.ஆனால் டிசம்பர் மாதம் இறுதியில் மழை எப்போதும் குறைந்தே இருக்கும், ஆனால் தற்சமயம் அதற்கு எதிர் மாறாக டிசம்பர் மாதம் முடியும் தருவாயில் கூட மழை பெய்த வண்ணம் இருக்கின்றது.
சரியாக வடகிழக்கு பருவமழை வருடம் தோறும் முடிவடையும் காலம் வந்ததும், பொதுமக்களிடையே ஒரு நிம்மதிப்பெருமூச்சுவந்தது.அப்பாடா, வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துவிட்டது, இனி பயம் தேவையில்லை என்று பொதுமக்கள் நிம்மதியாக இருந்த வேளையில், திடீரென்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு, அது புயலாக உருமாறி தற்போது அந்த புயல் கரையை கடந்து விட்டாலும், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அத்துடன் அரபிக் கடல் பகுதியில் புதிதாக உருவாகி இருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, இன்று தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவு பிறப்பித்திருக்கின்றன.