மத மாற்றம் அல்லது கலப்புத் திருமணமோ பிறப்பால் நிர்ணயிக்கப்படும் சாதியை மாற்றாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு, பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், பட்டியல் சாதியல்லாத ஒருவரை திருமணம் செய்திருந்த பின்னர், அவர் மீது நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் சாதிய அடிப்படையிலான அவமதிப்பு குறித்த புகாரை மையமாகக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார், 2024 பிப்ரவரி 10ஆம் தேதி வழங்கிய உத்தரவில், குற்றவியல் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தார்.
இந்த மேல் முறையீட்டை தினேஷ் மற்றும் மேலும் எட்டு பேர் தாக்கல் செய்திருந்தனர். அவர்கள், அலிகார் மாவட்டத்தில் உள்ள எஸ்.சி/ எஸ்.டி சட்ட சிறப்பு நீதிமன்றம் 2022 ஜூலை 27ஆம் தேதி வழங்கிய சம்மன் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். அந்த சம்மன் உத்தரவில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 323, 506, 452, 354 ஆகிய பிரிவுகளின் கீழும், SC/ST சட்டத்தின் 3(1)(R) பிரிவின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னை தாக்கியதாகவும், அவதூறாக பேசியதாகவும், தனது சாதியை குறிப்பிட்டு இழிவான வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறியிருந்தார். அந்த சம்பவத்தில் தன்னை உட்பட மூவர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக, குற்றம் சாட்டப்பட்டவர்கள், அந்த பெண் முதலில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததால், தனது சாதி அடையாளத்தை இழந்துவிட்டார் என்று வாதிட்டனர். திருமணத்திற்குப் பிறகு, ஒரு பெண் தனது கணவரின் சாதியையே ஏற்றுக்கொள்வதாகவும், எனவே எஸ்.சி/ எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்றும் அவர்கள் கூறினர்.
மேலும், அந்த பெண் மீது முன்பே தாங்கள் ஒரு FIR பதிவு செய்திருந்ததால், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தப் புகார் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
ஆனால் மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், இரு தரப்பினரும் அளித்த புகார்களும் ஒரே நாளில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று தெரிவித்தார். எனவே, இந்தப் புகார் எதிர்வினையாக கொடுக்கப்பட்டது என்ற வாதம் ஏற்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், சாட்சிகளின் வாக்குமூலங்கள், காயம் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே கீழமை நீதிமன்றம் சம்மன் உத்தரவு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டது. மேலும், எதிர்மறை புகார்கள் (cross cases) இருப்பது மட்டுமே ஒரு புகாரை நிராகரிக்க காரணமாக இருக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
முக்கியமாக, “ஒருவர் மதம் மாறினாலும், அவரது பிறப்புச் சாதி மாறாது. அதேபோல், திருமணம் செய்ததாலும் சாதி மாறாது. எனவே, புகாரளித்த திருமணத்தின் காரணமாக தனது பட்டியல் சாதி அடையாளத்தை இழந்தார் என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியது. இந்த காரணங்களின் அடிப்படையில், தினேஷ் மற்றும் பிறர் தாக்கல் செய்த குற்றவியல் மேல் முறையீட்டை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Read More : வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! சுங்கக் கட்டணத்தில் 25 சதவீதம் குறைப்பு..!



