சீனாவை உலகளவில் முன்னணி பொருளாதார வல்லரசாக கட்டியெழுப்பிய முன்னாள் பிரதமரும், “பொருளாதாரத்தின் இரும்பு மனிதர்” என்று போற்றப்பட்டவருமான ஜூ ரோங்ஜி (97) உடல்நலக் குறைவால் பெய்ஜிங்கில் காலமானார். 1998 முதல் 2003 வரை பிரதமராக இருந்த இவர், சீனாவை சந்தைப் பொருளாதாரப் பாதைக்கு திருப்பி, வறுமையைக் குறைத்து, பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்த முதன்மை சிற்பியாவார்.
அரசு அதிகாரிகள் சலுகைகளை எதிர்பார்க்காமல், மக்கள் சேவகர்களாக உண்மை பேச வேண்டும் என வலியுறுத்திய இவர், 2001-இல் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைய முக்கியக் காரணமாவார்.
இவரது சில தீவிர சீர்திருத்தக் கொள்கைகள் விமர்சனங்களுக்கும் உள்ளாகின. நாட்டின் நஷ்டத்தில் இயங்கிய அரசு நிறுவனங்களைச் சீரமைக்கும் நோக்கில் அவர் எடுத்த முடிவுகளால் சுமார் 4 கோடி ஊழியர்கள் வேலை இழக்க நேரிட்டது. மேலும், உலக வர்த்தக அமைப்பில் இணைய அவர் வழங்கிய சலுகைகள் நாட்டிற்கு எதிரானது என சிலர் குற்றம் சாட்டினர். ஆனால், அனைத்தையும் பொய்யாக்கும் வகையில், அவரது முடிவுகள் சீனா உலகப் பொருளாதாரத்தில் அழியாத தடம் பதிக்க உதவியது என்பதைப் பின்னாள்களில் பொருளாதார வல்லுநர்கள் ஒப்புக்கொண்டனர்.
கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தங்கள், கட்டுப்பாடற்ற பணவீக்கத்தை சீரமைத்தது மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை மூலம் ‘இரும்புக்கரப் பிரதமர்’ எனப் புகழ்பெற்றார். இவரது மறைவு சீன வரலாற்றில் ஒரு பிரம்மாண்ட சீர்திருத்த சகாப்தத்தின் முடிவாக பார்க்கப்படுகிறது.
Read More : முதல்வர் விஜயின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு..!! பிரம்மாண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!


