குழந்தைகள் கையில் கொடுக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் அதனுடன் வரும் சிறிய பரிசுப் பொருட்கள் குறித்து பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கண நேர அலட்சியம்கூட குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதை கர்நாடகாவில் நடந்த இந்தச் சோகச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது ஒரே மகனான முகுந்த் மயூர், சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த சிறிய பிளாஸ்டிக் பரிசுப் பொம்மையை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். விளையாடிக் கொண்டிருந்தபோது அந்தப் பொம்மையை வாயில் வைத்த நிலையில், எதிர்பாராத விதமாக அது தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது.
இதனால் சிறுவனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. குழந்தை சுவாசிக்க முடியாமல் தவித்ததைப் பார்த்த பெற்றோர் உடனடியாக உதவ முயன்றனர். பின்னர் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே முகுந்த் மயூர் உயிரிழந்தார். ஒரே மகனை இழந்த பெற்றோர் கதறி அழுத காட்சி அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சம்பவம், சிறிய பிளாஸ்டிக் பொம்மைகள், நாணயங்கள், பட்டன் பேட்டரிகள், மணிகள் உள்ளிட்ட பொருட்களை குழந்தைகள் எளிதில் வாயில் வைக்கும் பழக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளது. குறிப்பாக, சிறிய குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கும்போது, அதனுடன் வரும் பரிசுப் பொருட்கள் அல்லது சிறிய பொருட்கள் அவர்களின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், எதை வாயில் வைக்கிறார்கள் என்பதை பெற்றோர் தொடர்ந்து கவனிப்பது அவசியம் என்றும் குழந்தைகள் நல நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read: கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்… மனைவியை சரமாரியாக தாக்கிவிட்டு 2 குழந்தைகளுடன் மாயமான கணவர்!



