பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கான மாநில அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பாடுபட்டு வீர தீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில் வருகிற 2026 ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியான பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வருகிற நவம்பர் மாதம் 10-ம் தேதி வரை அரசு விருதுகள் இணையதளமான http://awards.tn.gov.in வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கு விண்ணப்பிக்க 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழ்நாட்டில் வசிக்கும் பெண் குழந்தையாக இருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருக்க வேண்டும். அதேபோல, பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்றவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பெயர், தாய், தந்தை முகவரி, ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரர் ஆற்றிய அசாதாரண வீர தீர செயல் மற்றும் சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாமல் குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும். மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.