தமிழ்நாடு அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக பல நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு “புதுமைப் பெண்”, “தமிழ் புதல்வன்” திட்டங்கள் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், சீருடை, காலணி, பள்ளி பை, மதிய உணவு, பேருந்து இலவசப் பயணம் என பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டங்களில் ஒன்றாக, 9 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்காக ஆண்டுதோறும் ரூ.1000/- கல்வி உதவித்தொகை வழங்கும் அரசு திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது. இந்த உதவித்தொகை 12 ஆம் வகுப்பு வரை தொடரும். இந்த திட்டத்தில் சேர்வதற்கு, மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தைத் தாண்டக்கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 100 மாணவர்கள் (50 ஆண், 50 பெண்) தேர்வு செய்யப்படுவர். தேர்வு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு வழியாக நடைபெறும்.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2025-26 கல்வியாண்டிற்கான ஊரகத் திறனாய்வு தேர்வு நவம்பர் 29, 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும். மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 28.10.2025 முதல் 04.11.2025 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.10 தேர்வுக் கட்டணமாக சேர்த்து தங்களது பள்ளித் தலைமையாசிரியரிடம் அல்லது முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்தத் திட்டம், ஊரகப் பகுதிகளில் கல்வி பெறும் மாணவர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாகும். அவர்கள் மேல்நிலைப் படிப்பில் முன்னேறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் உதவியாகும். எனவே, பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
Read more: சனி பகவானுக்குப் பிடித்த ராசிகள் இவை தான்… சனியின் அருளால் புகழும் பணமும் பெறும் அதிர்ஷ்டசாலிகள்!



