ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, மகளிர் உரிமைத் தொகை இன்று ஒரு நாள் முன்கூட்டியே வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கியது. பெண்களின் உழைப்பை அங்கீகரிப்பதையும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித்தொகை மூலம் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மற்றும் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ வழிவகுத்து வருகிறது.
2023-ல் 1.63 கோடி விண்ணப்பங்களில் 1.06 கோடி பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேல்முறையீடு மூலம் 7.35 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். தற்போது 1.16 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனடைகின்றனர். இந்த திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இதே திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை முன்னிட்டு, மகளிர் உரிமைத் தொகை இன்று ஒரு நாள் முன்கூட்டியே வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பயனாளர்கள் சிரமமின்றி தொகையைப் பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான விண்ணப்ப நடைமுறை மிக எளிமையாக உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, கைபேசி எண், வங்கி கணக்கு பாஸ்புக் ஆகிய ஐந்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்; கூடுதல் ஆவணங்கள் தேவையில்லை. மாநிலம் முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு விண்ணப்பங்கள் விரைவாகச் சரிபார்க்கப்பட்டு, பத்து நிமிடங்களுக்குள் பணிகள் நிறைவு செய்யப்படுகின்றன.
சென்னையின் 15 மண்டலங்களிலும், நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு வார்டிலும் நவம்பர் மாதம் வரை இரண்டு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை மட்டும் 109 முகாம்கள் செயல்படும் என அரசு தெரிவித்துள்ளது.
Read more: உஷார்!. தினமும் நெயில் பாலிஷ் போடுகிறீர்களா?. ரசாயனங்களால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து?.