அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள்வறுமை, தமிழ்த்தொண்டர் பெருமக்களைத் தாக்காவண்ணம் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.7500/-மும், மருத்துவப்படி ரூ.500/உம் என மொத்தம் ரூபாய் எட்டாயிரம் வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம்வாழ்நாளை ஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த் திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.
தகைமைமேல் தகைமையாக அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணச்சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ்க்காத்த தகைமைக்காக உதவித்தொகை பெற்ற தமிழறிஞர் பெருமக்களின் மறைவுக்குப் பின்னர். அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / விதவை மகளுக்கு வாழ்நாள் முழுவதும் ரூ.2500/-மற்றும் மருத்துவப்படி ரூ.500/- என அத்திருத்தொண்டு தொடர்கிறது.
தமிழுக்கும் தமிழ்வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்பொழுது, ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 150-ஆக உயர்த்தப்படும். இதற்கென தொடர் செலவினமாக ரூபாய் 48 இலட்சம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும். மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு. உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையினை 100-இலிருந்து 150 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பெருமக்களிடமிருந்து 2025-2026ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் (tamilvalarchithurai.org/agavai) என்ற வலைதளம் வாயிலாகவும் மூலமாக விண்ணப்பிக்கலாம்.



