செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபர் மாதம் பிறந்துள்ளது. சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கை, குடும்ப பட்ஜெட் மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பல புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளன. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் மானியம், வங்கிகளில் நிலையான வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள், பிறப்பு – இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான நடைமுறைகள், என்.ஆர்.ஐ சொத்து வாங்குவதற்கான வரி விதிகள் மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்களின் விலை உயர்வு என நிதி சார்ந்த பல்வேறு துறைகளில் மத்திய அரசும் ஒழுங்குமுறை அமைப்புகளும் அதிரடி மாற்றங்களை முன்னெடுத்துள்ளன.
சிலிண்டர் பயோமெட்ரிக் கட்டாயம்:
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்களால் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். வணிகப் பயன்பாட்டுச் சிலிண்டர்களின் விலை தொடர் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் சூழலில், இந்த முறை வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகளிடையே எழுந்துள்ளது.
அதேநேரத்தில், வீட்டு உபயோக எல்.பி.ஜி நுகர்வோர் மானிய விலையில் தொடர்ந்து சிலிண்டர்களைப் பெறுவதற்கு பயோமெட்ரிக் அங்கீகாரத்தை (Biometric authentication) முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போலி மற்றும் போலி இணைப்புகளை முற்றிலுமாக ஒழித்து, உண்மையான தகுதியுள்ள நுகர்வோருக்கு மட்டுமே அரசு மானியம் சென்றடைவதை உறுதி செய்ய இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி FD-களுக்கு ஒரே சீரான வட்டி விகிதம்:
முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, வங்கிகள் இனி ஒரே வைப்புத் தொகை மற்றும் கால அளவிற்கு வெவ்வேறு கிளைகளில் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்க முடியாது. ஒரே நகரத்திற்குள் கிளைக்கு கிளை மாறுபட்ட வட்டி விகிதங்கள் வழங்கப்படுவதைத் தடுத்து, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சமமான மற்றும் வெளிப்படையான வட்டி விகிதங்களை பகிரங்கமாக அறிவித்து வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ் விதிகளில் கிடுக்கிப்பிடி:
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுகளில் முறைகேடுகள் மற்றும் போலி ஆவணங்கள் உருவாவதைத் தடுக்க புதிய கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. ஒரு நிகழ்வு நடந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, ஆனால் இரண்டு வருடங்களுக்குள் தாமதமாகப் பதிவு செய்யப்பட்டால், அனைத்துத் தகவல்களும் அதிகாரிகளால் நேரில் விரிவான கள ஆய்வு செய்யப்பட்டுச் சரிபார்க்கப்படும். அதுவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலதாமதம் என்றால், முதல் வகுப்பு நீதித்துறை நடுவரின் (Judicial Magistrate First Class) முறையான நீதிமன்ற உத்தரவு பெற்றால் மட்டுமே இனி பதிவு செய்ய முடியும்.
UPI மற்றும் வணிக கட்டணம்:
ரூபாய் 2,000-க்கு மேற்பட்ட குறிப்பிட்ட யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகள் (P2M) மீதான எம்.டி.ஆர் (MDR) கட்டண நடைமுறைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வணிகர்களுக்கான இந்த நடைமுறை அக்டோபர் 15 முதல் கணக்கில் கொள்ளப்படவுள்ள நிலையில், சிறிய அளவிலான 2,000 ரூபாய் வரையிலான நுகர்வோர் பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, சில்லறை வணிகச் செலவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
என்.ஆர்.ஐ சொத்து:
வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து (NRI) நிலம், வீடு அல்லது மனை வாங்குவோருக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) பெரும் நிம்மதியை அளித்துள்ளது. என்.ஆர்.ஐ-களிடம் சொத்து வாங்கும் போது வரிப் பிடித்தம் செய்வதற்காக ‘டான்’ (TAN – Tax Deduction and Collection Account Number) எண் பெறுவது இதுவரை வாங்குபவர்களுக்குப் பெரும் நடைமுறைச் சிக்கலாக இருந்து வந்தது. தற்போது அந்த நிபந்தனையை நிரந்தரமாக நீக்கி வரி நடைமுறைகளை அரசு எளிமைப்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயர்வு:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் ஏசிக்கள் போன்ற நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கத் திட்டமிட்டிருப்போருக்குச் சற்று ஏமாற்றமளிக்கும் செய்தி காத்திருக்கிறது. உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, நுகர்வோர் மின்சாதனப் பொருட்களின் விலையை 5 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பண்டிகைக்காலச் சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும், இந்த அடிப்படை விலை உயர்வு வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டில் எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Read More : பணியின் போது அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்? தமிழ்நாடு அரசு விளக்கம்..!!



