கர்நாடகாவின் ராமதீர்த்தம் மலைப்பகுதியில் உள்ள ஆபத்தான குகையில், ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண் தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷப் பாம்புகள், காட்டு விலங்குகள் அதிகம் காணப்படும் வனப்பகுதியில் குகை ஒன்றில் அவர்கள் தங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
நினா குடினா (வயது 40) என அடையாளம் காணப்பட்ட அந்த பெண் ரஷ்யாவை சேர்ந்தவர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆன்மீக அமைதி தேடி இந்தியா வந்ததாகவும், தனிமையில் தியானம் செய்ய அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார். பாதுகாப்பற்ற இடத்தில் குழந்தைகளுடன் தங்கி இருப்பது குறித்து போலீசார் அவருக்கு விளக்கம் அளித்து, பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர். பின்னர், அருகிலுள்ள ஆன்மீக மடத்தில் தங்க விடு வழங்கப்பட்டது.
அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆவணங்களை போலீசார் பரிசோதித்த போது, 2017ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வர்த்தக விசாவில் வந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் விசா 2018 ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்துவிட்டது என்பது தெரியவந்தது. இடைப்பட்ட காலத்தில் கோவாவில் தங்கி இருந்த அவர், பிறகு நேபாளம் வழியாக மீண்டும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது, அந்த பெண் மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகள் காப்பகத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். சட்டப்படி, இந்தியா திருப்பியனுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவர்களை ரஷ்யாவுக்கு நாடுகடத்த நடவடிக்கைகளை மத்திய உள்துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Read more: அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்குறீங்களா..? உயிருக்கே ஆபத்து..!! – எச்சரிக்கும் நிபுணர்கள்