வெளிநாட்டில் உயர்கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை, பி.எச்.டி மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய படிப்புகளை மேற்கொள்ள, ‘தேசிய வெளிநாட்டு உதவித்தொகை’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம் மக்களவையில் தெரிவித்தார். ஆண்டுக்கு தகுதியுள்ள பழங்குடியின மாணவர்கள் 20 பேருக்கு வழங்கப்படும் இந்த உதவித்தொகைக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 6 லட்ச ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் கல்விக்கட்டணம், விசா கட்டணம், மருத்துவக் காப்பீடு மற்றும் விமானப் பயணச் செலவுகள் வழங்கப்படுகின்றன.2015-ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான நிதி மாணவர்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் நேரடியாகச் செலுத்தப்படுவதால் நிலுவைத் தொகைகள் ஏதுமில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கு மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 56 லட்சம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் பயனடைந்துள்ள பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கைக் குறித்த விவரங்கள் மாவட்டம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 2,00,841 பழங்குடியின மாணவர்களுக்கு 2020-21-ம் ஆண்டிலிருந்து 2024-25-ம் ஆண்டுவரை மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.



