ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 6, 7 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 8, 9 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 10-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் இன்று பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி உள்ளூர் விடுமுறை
தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 9ஆம் தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக செயல்படும்” என கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது.