அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியில் இணைந்த கையோடு தற்போது முக்கிய நிர்வாகிகளை விஜய் கட்சியில் இணைக்கும் பணியில் வேகத்துடன் செங்கோட்டையன் செயல்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் செங்கோட்டையன் சொந்த அண்ணன் மகனும் ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருமான கே கே செல்வம் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.கே.செல்வன், “அரசியலில் 53 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வெற்றிக்கும் மிக முக்கிய காரணம் எனது தந்தை. ஆனால், அதையெல்லாம் மறந்து இரண்டரை கோடி தொண்டர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது தவெகவில் ஐக்கியமாகியிருக்கிறார். எடப்பாடியார் மீது செங்கோட்டையன் வைக்கும் குற்றசாட்டுகள் அனைத்தும் தவறானவை.
நாங்கள் இல்லாவிட்டால் 2016 தேர்தலில் எங்கள் சித்தப்பா செங்கோட்டையன் தோற்கடிக்கப்பட்டிருப்பார். 2006 தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றிருக்க மாட்டார். நாங்களும் தொண்டர்களும் உழைத்ததாலேயே கோபிச்செட்டிபாளையத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதைக் கைவிட வேண்டும்.
திமுக ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் மிக அதிகமாக இருக்கிறது. திமுக தொண்டர்களுக்காக கூட ஒரு காரியத்தை திமுக மாவட்டச் செயலாளரால் நிறைவேற்றிக் கொடுக்க முடியவில்லை. திமுக ஆட்சியில் அக்கட்சியின் தொண்டர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. மக்களும் மகிழ்ச்சியாக இல்லை. எனவே வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கே.கே. செல்வன் அதிமுகவில் இருந்து விலகி 2020 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.



