கோபி செட்டிபாளையம் வழியாக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செங்கோட்டையன், ஈரோடு கோபிச்செட்டிபாளையம் அருகே நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்..
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ வரும் 5-ம் தேதி அன்று கோபிச்செட்டிப்பாளையம் கழக அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேசப் போகிறேன்.. அப்போது என்ன கருத்துகளை சொல்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளலாம்.. அதுவரை பொறுத்திருங்கள்..” என்று தெரிவித்தார். இதனால் அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் விலக இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் தனது கட்சி அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி போட்டோவை நீக்கிய செங்கோட்டையன், ஜெயலலிதா, எம் ஜி ஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் புகைப்படத்தை இணைத்துள்ளார். அதே போல் நேற்று காலையில் 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசித்த அவர், மாலையில் பவானி எம் எல் ஏ பண்ணாரி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணி உள்ளிட்ட 10 பேருடன் மட்டும் ஆலோசித்தார். இதில் அவரின் நிலைபாடு குறித்து தெளிவுப்படுத்தியதாக கூறப்படுகிறது.



