அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் ‘கெடு’விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். இதனிடையே செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசி இருந்தார். செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ், டிடிவி ஆதரவாளர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். நீலகிரியில் இன்று நடக்கும் பரப்புரையில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கார் மூலமாக கோபி, சத்தியமங்கலம் வழியாக எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார். கோபி பஸ் ஸ்டாண்டில் காலை 7 மணிக்கு அவரை அதிமுகவினர் வரவேற்கின்றனர். இதை தவிர்ப்பதற்காகவே செங்கோட்டையன் சென்னைக்கு கிளம்பியதாக கூறப்படுகிறது.



