அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த செங்கோட்டையன், அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் திடீர் ட்விஸ்டாக செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக கடந்த 3 நாட்களாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. அதற்கேற்றார் போல, நேற்று செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்..
இதை தொடர்ந்து நேற்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் அவரை சந்தித்து பேசினார்.. சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீடித்தது.. இதன் மூலம் செங்கோட்டையன் தவெகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியானது.
அதன்படி இன்று செங்கோட்டையன் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார்.. பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன், அக்கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சுமார் 100 தவெகவில் இணைந்தனர்.. தவெகவில் இணைந்த உடனேயே கட்சிப் பொறுப்பை விஜய் செங்கோட்டையனுக்கு வழங்கினார்..
அதன்படி, செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்..
இந்த நிலையில் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.. மதுரையில் எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு இபிஎஸ் “ அவர் (செங்கோட்டையன்) அதிமுகவில் இல்லை.. அதனால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.. நன்றி வணக்கம்..” என்று ஒரே வரியில் பதில் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்..
Read More : தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ‘காக்கா முட்டை’ திரைப்படம் ஒளிபரப்ப உத்தரவு…!



