அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். முதல்வராக்கிய சசிகலாவையும் டிடிவி தினகரனையும் வெளியேற்றியதோடு, தன்னை எதிர்த்து வாக்களித்த ஓ. பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆட்சியை நடத்தினார். இடையில் கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை அதிகாரமிக்க நபராக முன்னிறுத்திக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஒ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார்.
கட்சியின் மூத்த தலைவர்களை கட்சியில் இருந்து நீக்குவது செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எடப்பாடிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். ஜெயலலிதாவை எடப்பாடி புறக்கணித்துவிட்டார் எனக் குற்றம் சாட்டினார். அதற்குப் பிறகு அந்த விவகாரம் ஓய்ந்த நிலையில் தற்போது திடீரென அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என போர்க்கொடி தூக்கினார்.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மேலும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தார். இதனிடையே நீலகிரி பிரச்சாரத்தில் எடப்பாடி வருகைதந்த போது ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர். பெரும்பாலானோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்தவர்கள், இப்போது எடப்பாடி அணியில் சேர்ந்தனர். இதனால் செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி வருகை காரணமாக சென்னைக்குச் சென்ற செங்கோட்டையன் சில நாட்கள் அங்கேயே தங்கி இருக்கத் திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற பாஜகவின் பேச்சைக் கேட்டு குரல் கொடுத்த நிலையில், பாஜகவும் எடப்பாடியும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். செங்கோட்டையனை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.