தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸில் உள்ள டல்லாஸில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மாணவர் 28 வயதான சந்திரசேகர் போலே என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் டல்லாஸில் உள்ள பெட்ரோல் பங்கில் பகுதிநேர ஊழியராகப் பணிபுரிந்து வந்தார்.
ஹைதராபாத்தின் லால் பகதூர் நகரை சேர்ந்த சந்திரசேகர் , பல் அறுவை சிகிச்சையில் இளங்கலை (BDS) பட்டப்படிப்பை முடித்திருந்தார். பின்னர், உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். இந்த சம்பவம் அவரது குடும்ப உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சந்திரசேகரின் மார்பில் இரண்டு முறை சுடப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே அவர் உயிரிழந்தார். சந்தேக நபர்களில் ஒருவரை டல்லாஸ் காவல்துறை கைது செய்துள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தெலுங்கானா முதல்வர் வருத்தம்
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ அமெரிக்காவில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எல்.பி. நகரைச் சேர்ந்த மாணவர் போலே சந்திரசேகர் உயிரிழந்தது ஆழ்ந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சந்திரசேகர் குடும்பத்தினருக்கு அரசு துணை நிற்கும். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர அனைத்து உதவிகளையும் வழங்குவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பாரத் ராஷ்டிர சமிதி (BRS) MLA T ஹரிஷ் ராவ் சனிக்கிழமை ஹைதராபாத்தில் போலேவின் குடும்பத்தினரைச் சந்தித்தார். சம்பவம் குறித்து கவலை தெரிவித்த ராவ், தானும் BRS இன் பிற தலைவர்களும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரைச் சந்தித்து இரங்கல் தெரிவித்ததாகக் கூறினார். தனது எக்ஸ் பதிவில் “எல்.பி. நகரைச் சேர்ந்த தலித் மாணவர் சந்திர சேகர் போலே, பிடிஎஸ் முடித்துவிட்டு அமெரிக்கா (டல்லாஸ்) சென்று, அதிகாலையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்தது துயரமானது” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : 30 பேர் காயம்; உக்ரைனின் பயணிகள் ரயில் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய ரஷ்யா!