மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சாவன் மாதத்தில்(ஆடி மாதத்திற்கு நிகரானது) மட்டன் கேட்ட 30 வயது மகனை, அவரது தந்தை ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவின் வார்ஜே-மால்வாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பகவத் சூர்யபான் கெய்க்வாட். இவரது மனைவி பார்வதி பகவத் கெய்க்வாட். இவர்களுக்கு மகேஷ் என்ற மகன் (30) உள்ளார். இந்தநிலையில், தமிழர்கள் ஆடி மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பதை போலவே, இவர்களின் குடும்பத்தினரும் சாவன் மாதத்தில் புனிதத்தைக் கருதி அசைவ உணவு உண்பதைத் தவிர்த்து வந்துள்ளனர். இந்தச் சூழலில், மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற மகேஷ் மட்டன் வேண்டும் என்று வலியுறுத்தியதால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிக் கொதிப்படைந்த தந்தை, மகேஷை ஆத்திரத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, மகேஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வார்ஜே-மால்வாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தந்தை பகவத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், மகன் இறந்த பிறகு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிப்பதற்குப் பதிலாக, மகேஷின் தாயார் தனது கணவரைக் காப்பாற்றும் முயற்சியில் கொலைக்கான ஆதாரங்களை அழிக்க உதவியுள்ளார். எனினும், தகவலறிந்து விரைந்து வந்த வர்ஜே மல்வாடி காவல் துறை அதிகாரிகள், துரிதமாகச் செயல்பட்டு விசாரணை நடத்தி தந்தை மற்றும் தாய் இருவரையும் கைது செய்தனர்.



