வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாரா (மச்சூவாபாரா) பகுதியில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர், அவரது மனைவி, மகள் மற்றும் 12 வயது மகன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பூட்டிய வீட்டிற்குள் சந்தேகத்திற்குரிய வகையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில் காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நால்வரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
உயிரிழந்தவர்கள் ரங்பூர் ஜில்லா பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியரும் ஹோமியோபதி மருத்துவருமான 65 வயதுடைய கணபதி சக்ரவர்த்தி, அவரது 50 வயது மனைவி பிரிதிலதா சக்ரவர்த்தி, ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் முடித்த 23 வயது மகள் அகாமி சக்ரவர்த்தி பிரார்தி மற்றும் 5-ஆம் வகுப்பு படித்து வந்த 12 வயது மகன் பிரியம் சக்ரவர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை மதியத்திற்குப் பிறகு இந்தக் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாமல் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். வியாழன் இரவு முதல் அவர்களின் நான்கு மொபைல் போன்களும் அணைக்கப்பட்டிருந்தன. சனிக்கிழமை இரவு உறவினர்கள் நேரில் சென்று பார்த்தபோது, வீட்டின் முதன்மை கதவு பூட்டப்பட்டும் விளக்குகள் அணைக்கப்பட்டும் இருந்தன. அதன்பின்னர், தகவலறிந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று உடல்களைக் கைப்பற்றினர்.
குற்றப் புலனாய்வுத் துறையின் தகவலின்படி, 4 பேரின் உடல்களும் வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன. தாயார் மற்றும் மகளின் உடல்கள் படிக்கட்டுப் பகுதியிலும், கணபதியின் உடல் வீட்டின் மாடிப் பகுதியிலும் கண்டெடுக்கப்பட்டன. மேலும், 12 வயது சிறுவனின் உடல் ஒரு கட்டிலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கணபதி சக்ரவர்த்திக்கு யாருடனும் எவ்வித பகையும் இல்லை என்றும், புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வசித்து வந்த அவர்களை இலக்கு வைத்து தாக்கியது யார் எனத் தெரியவில்லை என்றும் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். தற்போது, ரங்பூர் பெருநகர காவல் துறை, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் துப்பறியும் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் சான்றுகளைச் சேகரித்து வருவதுடன், மரணத்திற்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் யார் என்பது குறித்த விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.



