விஜய் கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து நபர்கள் அவர் மீது செருப்பு தூக்கி வீசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தவெக தலைவர் விஜய் நேற்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 39 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூரில் தனது பிரச்சாரம் முடிந்த கையோடு திருச்சி சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கே கூடியிருந்த செய்தியாளர்கள் விஜய்யின் காரை சூழ்ந்து கொண்டு அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் விஜய் அவர்களின் கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
கூட்டத்திற்கு வரும் நபர்களுக்கு சரியான குடிநீர் வசதிகளும், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தவெக தலைவர் நேற்று விஜய் கரூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து நபர்கள் அவர் மீது செருப்பு தூக்கி வீசிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.