சேலம் மாவட்டத்தில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட அறிவிப்பில்; தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் அவர்களின் 2025-2026 ஆம் ஆண்டு செயல்திட்டத்தில், சேலம் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அரசு கல்லூரி வளாகங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மேட்டூர் அரசுக்கலைக்கல்லூரி, சேலம் – 8 அரசு மகளிர் கலை கல்லூரி, வனவாசி பாலிடெக்னிக்கல்லூரி, கோரிமேடு அரசு தொழில் பயிற்சி நிறுவனம் (ITI) போன்ற இடங்களில் சிறுதானிய உணவகம் அமைக்கப்பட உள்ளது. எனவே மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் சிறுதானிய உணவகம் அமைத்திட விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் விதிமுறைகளின்படி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஊரக பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களாகவும், கல்வி நிறுவன அமைவிடத்திலிருந்து 5 முதல் 8 கி.மீ-க்குள் உள்ளதாகவும் மகளிர் திட்ட அலுவலகத்தினால் தர மதிப்பீடு (A மற்றும் B) செய்யப்பட்டதாகவும் மற்றும் அனுபவமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களாகவும் இருக்க வேண்டும். மேற்படி, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் என்ற முகவரியில் 18.08.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.