இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான (டிஆர்டிஓ) உருவாக்கிய ராணுவ வீரர்களுக்கான பாராசூட்டில் விமானப்படை வீரர்கள் 32,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வெற்றிகரமாக சோதித்துப்பார்த்தனர். இந்த சோதனை, உள்நாட்டு அமைப்பின் திறன், நம்பகத்தன்மை மற்றும் மேம்பட்ட வடிவமைப்பை நிரூபித்துள்ளது.
முக்கிய சிறப்பு:
தற்போது இந்திய ஆயுதப்படைகள் பயன்படுத்தும் பாராசூட்களில், 25,000 அடிக்கு மேல் செயல்படக்கூடிய ஒரே பாராசூட் இதுவாகும்.உருவாக்கம்: ஆக்ராவில் உள்ள வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு பொறியியல் மற்றும் மின்னியல் மருத்துவ ஆய்வகம் ஆகிய இரு நிறுவனங்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து இதனை உருவாக்கியுள்ளன.
தொழில்நுட்ப சிறப்புகள்:
குறைந்த இறங்கு வேகம், மேம்பட்ட திசைமாற்று திறன், இந்திய செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்புடன் இணக்கம், வெளிநாட்டு குறுக்கீடுகளுக்கு உட்படாத தன்மை ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள். இது பாராட்ரூப்பர்கள் துல்லியமாக குறிப்பிட்ட இடங்களில் தரையிறங்க உதவுகிறது.
பலன்கள்:
இறக்குமதி உபகரணங்களை விட குறைந்த பராமரிப்பு நேரம், போர்க்காலத்தில் பிற நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாதது, உள்நாட்டு பாராசூட்களை அதிகளவில் பயன்படுத்த வழி கிடைத்துள்ளது.
இந்த சோதனை வெற்றிபெற்றதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஆர்டிஓவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறனுக்கான குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை என்று அவர் கூறினார். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் இது வான்வழி விநியோக அமைப்புகளில் சுயசார்புக்கான முக்கிய படி என்று குறிப்பிட்டுள்ளார்.