பீகாரில் பில்லி, சூனியம் செய்ததாக சந்தேகத்தில் ஒரே குடும்பத்தினரைச் சேர்ந்த ஐந்து பேரை, கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்து, தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பூர்ணிமா என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்மமாக முறையில் மரணம் ஏற்பட்டது. இதற்கு காரணம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் அமானுஷ்ய சடங்குகள் வளர்ப்பதுதான் காரணம் என நம்பினர். இதனால் அந்த குடும்பத்தினரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். நேற்று முன் தினம், கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து அந்த வீட்டிற்கு சென்று பாபுலால் ஒரான், சீதா தேவி, மஞ்ஜீத் ஒரான், ரானியா தேவி, டாப்டோ மொஸ்மாத் ஆகியோரை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீரவில்லை. பின்னர் அவர்களை எரித்துள்ளனர்.
அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று எப்படியோ தப்பித்து, போலீசில் தனது குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். மேற்கொண்டு அந்த குழந்தையால் விவரித்து கூறமுடியவில்லை. அந்த குழந்தை அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவந்துள்ளதால், கிராமத்தினர் வீடுகளை காலி செய்து வெளியேறிவிட்டார். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிராம மக்களை தூண்டிவிட்டதாக நகுல் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.