தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி, இந்த வருடத்தில் இந்திய அணி பெறும் 38-வது வெற்றியாகும்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டி20 தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் 2 போட்டிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து டெல்லியில் நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மலான் மற்றும் டி காக் களமிறங்கினர்.
3-வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டி காக் 6 ரன்களில் ஆவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து மலான், ஹென்ரிக்ஸ், மார்க்ரம் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். க்ளாஸென் மட்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 ரன்கள் குவித்தார். மற்ற தென் ஆப்பிரிக்க வீரர்கள் நிலைத்து ஆடாமல் வரிசையாக தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன்காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 100 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 8 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 10 ரன்களில் இஷான் கிஷன் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். அடுத்து ஜோடி சேர்ந்த சுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி இந்திய அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றது. 49 ரன்கள் எடுத்த நிலையில் சுப்மான் கில் தனது விக்கெட்டை களத்தில் விட்டுச்செல்ல, அடுத்து சஞ்சு சாம்சானுடன் இணைந்து ஸ்ரேயாஸ் அய்யர் இலக்கை கடந்து போட்டியுடன் சேர்ந்து தொடரையும் வென்றார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி, இந்த வருடத்தில் இந்திய அணி பெறும் 38-வது வெற்றியாகும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என அனைத்து வடிவங்களிளான போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணி இந்த வருடத்தில் தற்போது வரை 38 வெற்றிகளை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 19 ஆண்டுகால ஆஸ்திரேலிய அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றிருந்த ஆஸ்திரேலிய அணி அந்த வருடத்தில் மொத்தம் 38 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதுவே ஒரு வருடத்தில் ஒரு சர்வதேச அணி பெற்ற அதிக வெற்றியாக இருந்தது. தற்போது இந்திய அணி அந்த சாதனையை சமன் செய்துள்ளது. 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரவிருக்கும் சூழலில் ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடிக்க இந்திய அணிக்கு ஒரு வெற்றி மட்டுமே தேவைப்படுகிறது. இதனால் விரைவில் இந்திய அணி அந்த சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.