மகாராஷ்டிர சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சா் மாணிக்ராவ் கோகடே விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருந்துவருகிறார். மேலும், கூட்டணியில் இருக்கும் இரு கட்சிகளும் ஆட்சியில் அங்கம் வகிக்கின்றன. அதன்படி, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸில் இருக்கும் மாணிக்ராவ் கோகடே வேளாண் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
சமீபத்தில் அம்மாநிலத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில், வேளாண்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சட்டமன்றத்தினுள் அமர்ந்துகொண்டு ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். மாணிக்ராவ் கோகடே தனது செல்போனில் ரம்மி விளையாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோஷமிட்டனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சா் கோகடே, ‘சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களை பாா்க்க யூடியூபை திறக்க முற்பட்டபோது, கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரம்மி விளையாட்டு செயலி திறந்துவிட்டது. அதை நான் தவிா்க்க முயன்றேன்; ரம்மி விளையாடவில்லை. அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் துணை முதல்வர்கள் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பிறகு மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறையில் இருந்து விளையாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக விளையாட்டுத்துறை பொறுப்பு வகித்து வந்த தத்ததராயா பார்வே வேளாண் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபையில் ரம்மி விளையாடிய அமைச்சருக்கு விளையாட்டுத்துறை வழங்கி முதலமைச்சர் பெரிய பனிஷ்மென்ட் கொடுத்திருக்கிறார் என சமூகவலைதளத்தில் ட்ரோல் செய்து வருகிறது.