பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தால் மாணவி ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள ஃபாகிர் மோகன் கல்லூரியில் பிஎட் படித்து வந்த ஒரு மாணவிக்கு அவரின் துறை தலைவர் சமீர்குமார் சாஹு என்ற ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை முதல்தேதியில் மாணவி புகார் அளித்துள்ளார்.
இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் மறுத்துள்ளார். ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்த நிலையில், நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினர்.
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி முதல்வர் அலுவலகம் அருகே சென்று தீக்குளித்தார். இதை பார்த்த மற்ற இரண்டு மாணவர்கள் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீது தீ பரவியது. அங்கிருந்தோர் அவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவி 90 சதவிகித தீக்காயங்களுடனும், காப்பாற்ற முயன்ற மாணவர் 70 சதவிகித தீக்காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சாட்டப்பட்ட சஹீம்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும், கல்லூரி பேராசிரியரையும், கல்லூரி முதல்வரையும் சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.