புதிய அரசு ஆட்சி நிர்வாகத்தில் ஒரு முன்மாதிரியை உருவாக்கும் என்றும், இதுவரை எந்த மாநிலத்திலும் இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும், தங்களின் ஆளுமை திறனை உலகிற்கு நிரூபிக்கப் போவதாகவும் அமைச்சர் எஸ். கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசில், கட்சித் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற அதே நாளில் அமைச்சராக எஸ். கீர்த்தனா பதவியேற்றார். ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற 9 அமைச்சர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர்களுடன் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடராமணன், ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு மற்றும் கே.ஜி. அனுரா ஜே ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ். கீர்த்தனா, புதிய அரசு நிர்வாகத்தில் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் என்று தெரிவித்தார். “இது நம்ப முடியாத தருணம். எந்த மாநிலத்திலும் இவ்வளவு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்காது. எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, எவ்வளவு சிறப்பாக ஆட்சியை நடத்த முடியும் என்பதை உலகிற்கு காட்டுவோம்,” என அவர் கூறினார்.
மேலும் மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதியை மையமாகக் கொண்டு புதிய அரசை உருவாக்க ஒன்றுபட்ட முயற்சி தேவை என வலியுறுத்தினார். “இது ஒரு புதிய தொடக்கம். பொய்வாக்குறுதிகள் அல்லாமல் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுடன் மக்களுக்கு சேவை செய்யவேண்டும்” என அவர் தெரிவித்தார்.
யார் இந்த கீர்த்தனா? இவர் சிவகாசி தொகுதியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ ஆவார். ‘இந்தியாவின் வாணவேடிக்கை தலைநகரம்’ என அழைக்கப்படும் சிவகாசியில் இருந்து தேர்வான இவர், முதுகலை பட்டதாரி ஆவார். தனது 29 வயதில் அமைச்சரவையின் இளைய உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் 11,697 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இவர், விஜய் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒரே பெண் அமைச்சராகவும் உள்ளார். இதன்மூலம் சிவகாசி தொகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த ஆணாதிக்க அரசியல் நிலையை மாற்றியமைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Read more: முதலமைச்சரான பிறகு முதல் விசிட்.. பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய விஜய்..!



