வருங்கால வைப்பு நிதியில் இருந்து 90 சதவீதம் சேமிப்பு பணத்தை முன்பணமாக எடுக்கும் வகையில் விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. முதல் முறை வீடு வாங்குபவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தொகையில் ஒரு பகுதியை திரும்பப் பெறும் வசதி உள்ளது.
இபிஎஃப் திட்டத்தில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 68-BD-ன் படி, வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, வாங்கி வீட்டுக்கான மாத தவணை செலுத்துவது உள்ளிட்ட தேவைகளுக்காக பிஎஃப் (PF – Provident Fund) பணத்தில் இருந்து 90 சதவீதம் வரை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு உள்ளாகவே இந்த 90 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அனுமதி வழங்குகிறது.
வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டுக்கான மாத தவணை செலுத்துவது ஆகியவற்றுக்காக பணம் எடுப்பதற்கு முன்னர் கடுமையான விதிகள் பின்பற்றப்பட்டன. ஆனால், தற்போது அவை பெரும் அளவில் தளர்த்தப்பட்டுள்ளன.முன்னதாக, வீடு வாங்குவது, வீடு கட்டுவது, வீட்டுக்கான மாத தவணை செலுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்கு 36 மாதத்திற்கான பிஎஃப் தொகையை மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
அவ்வாறு 36 மாத பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஊழியர்கள் பிஎஃப் கணக்கு தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற விதியும் இருந்தது. அதுமட்டுமன்றி, ஏற்கனவே வீடு தொடர்பான திட்டங்களில் பயன்பெறும் நபர்களுக்கு பிஎஃப் பணத்தை பெற அனுமதி மறுக்கப்பட்டது.