மத்திய கிழக்கில் போர் பதற்றம்..! LPG, CNG விலை எவ்வளவு அதிகரிக்கும்..? நிலைமை மோசமாகிவிட்டதா..?

cng

மத்திய கிழக்கில் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போரின் தாக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வழங்குநரான கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) மற்றும் பிஎன்ஜி (PNG) எரிவாயு விலைகள் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.


கத்தாரின் ராஸ் லஃபான் உள்ளிட்ட தொழிற்புறங்களில் உள்ள எரிவாயு நிலையங்களை ஈரான் ட்ரோன்கள் மூலம் தாக்கியது என்று கத்தார் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் அந்த நிறுவனமானது LNG உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் ராணுவ தளங்களை தாக்கியதற்கு பதிலடியாக, ஈரான் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் துறைமுகங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியது.

2026 மார்ச் 1ஆம் தேதி, கத்தாரின் தலைநகரமான தோஹாவில் வில் உள்ள தொழிற்பகுதியில் ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு அங்கு புகை எழுந்தது காணப்பட்டது. இதையடுத்து கத்தார் தனது LNG உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியது.

இந்தியா வருடத்திற்கு சுமார் 27 மில்லியன் டன் LNG எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. அதில் சுமார் 40 சதவீதம் கத்தார் நாட்டிலிருந்து வருகிறது. இந்த எரிவாயு பெரும்பாலும் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது அந்த கடல்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கிருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய உள்நாட்டு சந்தைக்கு வரும் எரிவாயு விநியோகம் சுமார் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது.

உலகில் எல்பிஜி (LPG) அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 3.315 மில்லியன் மெட்ரிக் டன் LPG பயன்படுத்தப்பட்டது. மொத்த இறக்குமதியின் 85 முதல் 90 சதவீதம் வரை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே வருகிறது. சர்வதேச ஸ்பாட் மார்க்கெட்டில் எரிவாயு விலை ஒரு யூனிட்டுக்கு 25 டாலர் வரை உயர்ந்துள்ளது. இந்த போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்தால், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இரட்டிப்பாக கூட அதிகரிக்கலாம்.

2026 மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் 14.2 கிலோ எடையுடைய சலுகையில்லா LPG சிலிண்டர் விலை ரூ.850 முதல் ரூ.880 வரை உள்ளது. இதே நேரத்தில் ஐரோப்பாவில் LNG விலையும் 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இந்தியா பெரும்பாலும் கத்தார் நாட்டிலிருந்தே LNG இறக்குமதி செய்கிறது. பின்னர் அந்த LNG இந்தியாவில் மீண்டும் வாயுவாக்கம் செய்யப்பட்டு CNG ஆக மாற்றப்படுகிறது. மேலும் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் அங்கோலா போன்ற நாடுகளிலிருந்தும் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக CNG விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2026 மார்ச் 6 நிலவரப்படி, இந்தியாவில் CNG விலை ஒரு கிலோக்கு ரூ.70 முதல் ரூ.90 வரை உள்ளது. நகரத்திற்கு நகரம் விலை மாறுபடுகிறது. கத்தாரிலிருந்து எரிவாயு விநியோகம் மீண்டும் தொடங்கவில்லை என்றால், வரும் நாட்களில் CNG விலை இரட்டிப்பு அல்லது மூன்றடங்கு கூட உயர வாய்ப்பு உள்ளது.

இந்த எரிவாயு பற்றாக்குறையை சமாளிக்க இந்திய அரசு கனடா உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கனடா இயற்கை வளங்களில் வளமான நாடாகும். இந்தியாவிற்கு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்குத் தேவையான நம்பகமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரங்கள் தேவைப்படுகிறது. எனவே LNG மற்றும் பிற சுத்தமான எரிசக்தி துறைகளில் இந்தியா–கனடா ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் திட்டங்களும் தற்போது பரிசீலனையில் உள்ளன.

Read More : இந்தியா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி கொடுக்கணுமா..? தீயாக பரவிய தகவல்.. உண்மை என்ன..?

RUPA

Next Post

26 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்த திமுக..! எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? உத்தேச பட்டியல் இதோ..!

Sat Mar 7 , 2026
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன..  தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான […]
stalin dmk

You May Like