திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு குறித்து உச்சநீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. பரஸ்பர சம்மதத்துடன் திருமணத்திற்கு முன் உடல்ரீதியான உறவு கொள்வது ஒருவரின் நற்பண்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கான காரணமாக அமையாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அனைத்துக் காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவடையாது என்றும், திருமணம் செய்துகொள்ளாதது ஒருவரை ஒருவர் ஏமாற்றியதாக அர்த்தமாகாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தெலுங்கானா காவலர் ஆட்சேர்ப்பு வாரியம், ‘மோசமான நடத்தை’ என்ற அடிப்படையில் ஒருவரை காவலர் பணிக்குத் தகுதியற்றவர் என நிராகரித்தது தொடர்பான 2014-ஆம் ஆண்டு வழக்கின் விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் இந்த கருத்துகளைத் தெரிவித்தது.
வழக்கின் பின்னணி
கஜ்வெல் பகுதியைச் சேர்ந்த கஜுலா திருப்பதி என்ற இளைஞர், ‘ஸ்டைபெண்டியரி கேடட் டிரெய்னி போலீஸ் கான்ஸ்டபிள்’ (SCTPC) பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், தனது விண்ணப்பப் படிவத்தில், கடந்த காலத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு குற்றவியல் வழக்கு குறித்த விவரங்களை அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் நான்கு ஆண்டுகள் காதலில் இருந்தார். பின்னர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் திருப்பதி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருப்பதிக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது. இரு தரப்பினரும் வயது வந்தவர்களாக இருந்து, பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டால், அது ‘ஒழுக்கக்கேடான செயல்’ (moral turpitude) எனக் கருதப்படாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியது.. அத்துடன், திருப்பதியை காவலர் பணிக்குத் தகுதியற்றவர் என்று அறிவித்து தெலுங்கானா மாநில அளவிலான காவலர் ஆட்சேர்ப்பு வாரியம் பிறப்பித்த உத்தரவுகளையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
Read More : சூறாவளி காற்று.. டெல்லி விமான நிலையத்தில் 3 ஏர் இந்தியா விமானங்கள் கடும் சேதம்..!



