ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேனுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜப்பானில் நடக்கும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பேட்மிண்டன் விளையாட்டில், பெண்கள் இரட்டையர் SL3-SU5 பிரிவில் தங்கப் பதக்கமும், கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்ற இந்திய அணிகளுக்கும், இந்த அணிகளில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.
வீராங்கனை துளசிமதி முருகேசனின் சாதனைகளை பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.25 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர், இதுவரை 3 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவரது தொடர் வெற்றி, சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. அவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.



