தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.29 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகள், பட்டயப்படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கல்விக் கட்டணமாகவும், ரூ.10 ஆயிரம் சிறப்பு கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரமாக உள்ளது. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை மாதம் ரூ.54,025 வீதம் முதல் ஆண்டிலும், ரூ.55,149 இரண்டாம் ஆண்டிலும், ரூ.56,275 மூன்றாம் ஆண்டிலும் வழங்கப்படவுள்ளது.
முதுநிலை பட்டயப்படிப்பு ஊக்கத்தொகை முதல் ஆண்டில் மாதம் ரூ.50,673, 2-ம் ஆண்டில் ரூ.53,461 நிர்ணயிக்கப்பட் டுள்ளது.அதேபோல், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்வி கட்டணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நேரடி தொடர்பில்லாத பாடங்கள் (நான் கிளினிக்கல்) மற்றும் பட்டயப்படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3 லட்சமும், நிர்வாக இடங்க ளுக்கு ரூ.5 லட்சமும், வெளிநாடுவாழ் இந்தியர் இடங்களுக்கு ரூ.19 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிளினிக்கல் படிப்புகளுக்கு முறையே ரூ.3.5 லட்சம், ரூ.16 லட்சம் மற்றும் ரூ.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மேம்பாட்டு நிதியாக அதிகபட்சம் ரூ.60 ஆயிரம் வரை தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலித்துக் கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.



