வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது .
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகிய பொருள்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மாதந்தோறும் 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாக புகார்கள் எழுந்து வந்தன.
இதனைக் கருத்தில்கொண்டு, முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. எனினும், நீண்டகாலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் வீடு தேடி ரேஷன் பொருட்கள்’ வழங்கும் திட்டத்தை சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 10 நியாயவிலை கடைகள் என்ற அடிப்படையில் 100 நியாயவிலை கடைகளில் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, அவர்களின் இல்லங்களுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் சோதனை முறையில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More: சேமிப்புக் கணக்கு இருக்கா ? இனி இதற்கு அபராதம் இல்லை! குட்நியூஸ் சொன்ன பிரபல வங்கி!