முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்து விவசாயிகள் பயன்பெறலாம்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; விவசாயிகள் நீர்ப் பாசனத்திற்கான மின்சாரத் தேவையினை பெறுவதற்கு. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்கீழ் மின் கட்டமைப்புடன் சாராத. தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஒன்றிய அரசின் வரையறுக்கப்பட்ட விலையில் அரசு மானியத்தில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்டுவருகிறது.
சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் மூலம் மின் இணைப்பின்றி பகலில் சுமார் 8 மணிநேரம் வரை பாசனத்திற்காக தடையில்லா மின்சாரத்தினை பெற முடியும். மின் இணைப்பு இல்லாத, பாசன ஆதாரமுள்ள தனிநபர் விவசாயிகள் மற்றும் மின் இணைப்பு இல்லாத. பாசன வசதிக்கான சமுதாயக் கிணறு அமைத்துள்ள விவசாய குழுக்கள் தகுதியானவர்களாகும். புதியதாக ஏற்படுத்தப்படும் பாசனத்திற்கான கிணறுகள், நிலநீர் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருத்தல் வேண்டும்.
ஏற்கனவே உள்ள பாசன ஆதாரத்தல் டீசல் என்ஜின் பயன்படுத்தி வரும் பட்சத்தில், அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு, விவசாயிகளுக்கு 80% மானியத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், பொதுப் பிரிவினைத் சார்ந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த இதர விவசாயிகளுக்கு 70% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 60% மானியத்தில் வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டம் தொடர்பாக முழு விபரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் மாவட்ட செயற் பொறியாளர் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள சேலம் மேட்டூர், ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் செயல்படும் உதவி செயற் பொறியாளார் அலுவலகம் அல்லது வட்டார அளவில் உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.