தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான மற்றும் உண்மையற்ற தகவல்களைப் பரப்பி வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநிலத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மின் கட்டண புகார்கள் வந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறுவது முற்றிலும் பொய்யானது. பொதுமக்கள் தரப்பில் இருந்து அதுபோன்ற புகார்கள் ஏதும் வரவில்லை. மாறாக, மின்சார வாரியத்தின் நிர்வாக ரீதியான சீரமைப்பிற்காக சுழற்சி முறையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் இணைப்புகள் ஆய்வுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன” என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நேற்று ஆய்வு செய்யப்பட்ட 10,000 இணைப்புகளில் வெறும் 50 இணைப்புகளில் மட்டுமே கட்டண மாற்றம் இருந்தது கண்டறியப்பட்டது. அதுவும் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால் ஏற்பட்ட வழக்கமான மாற்றமே தவிர வேறில்லை. கோடை காலம் முடிந்த பிறகு மின் நுகர்வு அதிகரிப்பதால் கட்டணம் சற்றே உயர்வது இயல்பானதுதான். இதையெல்லாம் அறியாமல் வாட்ஸ்அப் தகவல்களை வைத்துக்கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஒருவர் பொறுப்பற்ற முறையில் வதந்திகளைப் பரப்பக் கூடாது. தற்போதைய அரசு காலியாக உள்ள களப்பணியாளர்கள் மற்றும் மின் கணக்கீட்டாளர்களை நியமிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்படும்” எனக் கூறினார்.
காவிரி நீர் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், “தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்காமல் போனதற்கு முந்தைய திமுக அரசின் தவறான முடிவுகளே காரணம். மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தில் நமக்கு இருந்த வலுவான சட்டப் பிரிவுகளை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தளர்த்திவிட்டார். குறிப்பாக, தீர்ப்பாய உத்தரவை கர்நாடகா மீறினால் அணையை ஆணையமே தன் கட்டுப்பாட்டில் எடுத்துத் தண்ணீரை திறக்கலாம் என்ற விதியை நீக்கியதே தற்போதைய பின்னடைவுக்கு முக்கியக் காரணம்” என்று சாடினார்.
கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தரக் கூடாது என்பதில் ஒரே குறியாக இருப்பதாகவும், மத்திய நீர்வளத் துறை அமைச்சரும் கர்நாடகாவிற்கு ஆதரவாகச் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக செய்த தவறுகளால் ஏற்பட்ட காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க உச்ச நீதிமன்றத்தை சட்டரீதியாக அணுகுவது ஒன்று மட்டுமே தற்போதைய ஒரே வழி என்றும், அதுகுறித்து முதலமைச்சர் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
Read More : ₹3,000 முதலீடு போதும்… பெண்களுக்கு மாதம் ₹50,000 வரை வருமானம் தரும் தொழில்!



