திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 60-க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று காலை உணவு சமைக்கும் ஊழியர்கள் சமையல் கூடத்திற்கு வந்து பார்த்தபோது, சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த சமையலர்கள் பள்ளி வளாகத்தை சுற்றி பார்த்தபொழுது, அங்கு மாணவர்கள் குடிநீர் அருந்தும் குழாய் உடைக்கப்பட்டு இருந்தது. அந்த தொட்டிக்குள் மனித கழிவு கொட்டப்பட்டிருந்தது. மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மற்றும் தென்னை மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக பள்ளி தலைமையாகியிருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன், திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் பள்ளியில் மலம் கலந்த குடிநீர் தொட்டி, சேதப்படுத்தப்பட்ட சமையல் பொருட்களையும் பார்வையிட்டு, ஊழியர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் அன்புச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனால் பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டுமென, போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.. இது குறித்து திருவாரூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இதில் சாதிய பிரச்சினை ஏதுமில்லை, குடிபோதை ஆசாமிகள் தான் இதனை செய்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது. புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்து விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், திருவாரூர் அருகே காரியாகுடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.