டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (என்எஸ்எஸ்) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு அனைத்து வகை பள்ளிகளையும் சேர்ந்த ஆசிரியர்கள் ‘எமிஸ்’ இணையதளம் வாயிலாக ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டது.
இந்த ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுதலாக உள்ளீடு செய்து சமர்ப்பித்துவிட்டால் அதை சரிசெய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ள ஜூலை 29-ம் தேதி முதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம். ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு பிறகு, ஆன்லைன் விண்ணப்பங்கள் மாவட்ட தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் அதன்பிறகு விண்ணப்பத்தில் எவ்விதமான திருத்தமும் மேற்கொள்ள முடியாது என்பதை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.