மத்திய கிழக்கு பகுதியில் தீவிரமாக நடைபெற்று வரும் போரின் 12வது நாளில் கடலில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளன. உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் 16 ஈரான் கப்பல்களை தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதாவது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடல்சார் கண்ணிவெடிகளை (Naval Mines) வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஈரானின் 16 படகுகளை அமெரிக்கப் படைகள் அழித்துள்ளன.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.. ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்த போர் கடல் பகுதிகளுக்கும் விரிவடைந்து ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த தாக்குதல் குறித்து சமூக ஊடகங்களில் தகவல்களை பகிர்ந்தார். அதே நேரத்தில் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டுப்பாட்டு அமைப்பு தாக்குதல் நடைபெற்ற காட்சிகளை காட்டும் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
உலகின் முக்கியமான கடல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை அருகே ஈரான் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 16 மைன் அமைக்கும் கப்பல்கள் அழிக்கப்பட்டன என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.. உலகளவில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் சுமார் 20 சதவீதம் இந்த கடல்சுரங்கம் வழியாகவே கடத்தப்படுகிறது.
இதற்கு முன்பு, கடல் வழித்தடத்தில் கண்ணி வெடிகளை பரப்பும் கப்பல்கள் வைக்கப்பட்டிருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில் இதுவரை பார்க்காத அளவுக்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
உலகின் மிக முக்கியமான எரிசக்தி போக்குவரத்து பாதையாக கருதப்படும் ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் மைன்கள் அமைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த வழியாகச் செல்லும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
12 வது நாளை எட்டிய போர்
இந்த மோதல் 12வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் கடும் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.. அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத், இந்த போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்னும் கடுமையான தாக்குதல்கள் வரவிருக்கின்றன என்று எச்சரித்தார். மேலும் இந்த மோதலில் அமெரிக்க ராணுவத்தினருக்கு ஏற்பட்ட காயங்கள் பற்றிய தகவல்களையும் அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
இந்த மோதலின் தாக்கம் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வருகிறது. ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் மீது எச்சரிக்கை விடுத்தும், Israel மற்றும் வளைகுடா அரபு நாடுகளின் மீது புதிய தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.
என்ன நடக்கிறது?
ஈரான் தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிசக்தி தொடர்பான கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் அளவுக்கு அழுத்தம் உருவாக்கி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் இஸ்ரேல் மீது மற்றும் அந்தப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் ஈரான் தாக்கியுள்ளது.
உலக சந்தைகளில் தாக்கம்
அமெரிக்க பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை பெரிதாக மாற்றமின்றி நிலைத்திருந்தது. இந்த போர் எப்போது முடிவடையும் என்பதற்கான சிக்னல்களுக்கு முதலீட்டாளர்கள் காத்திருந்ததால் சந்தையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
இதனிடையே எண்ணெய் விலை திங்கட்கிழமை உயர்ந்த உச்ச நிலையை விட தற்போது குறைவாகவே உள்ளது. ஆரம்பத்தில் ஏற்பட்ட விலை உயர்வு உலக நிதி சந்தைகளில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த போர் நீண்ட காலம் நீடித்தால் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே இருந்தது.
ஈரான் தலைநகரான டெஹ்ரானில் வசிக்கும் சிலர், இந்த போரின் போது மிகவும் கடுமையான தாக்குதல்களை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர். ஒரு பெண் தனது வீட்டிற்கு அருகிலிருந்த குடியிருப்பு கட்டிடம் நேரடியாக தாக்கப்பட்டதை பார்த்ததாக கூறினார். மேலும் ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் நகரங்களை விட்டு கிராமப்புறங்களுக்கு தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனானிலும் தாக்குதல்
இதனிடையே லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 7 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் புதன்கிழமை அதிகாலை தெரிவித்தது.
உயிரிழந்தவர்களில் ஒருவராக சிவப்பு சிலுவை அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் உள்ளார். அவர் திங்கள்கிழமை நடந்த தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்தபோது, அவரது மீட்பு குழுவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் செவ்வாய்க்கிழமை நடந்த இஸ்ரேல் விமான தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இதில் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய இஸ்லாமிய சுகாதார அமைப்பில் பணிபுரிந்த ஒரு மருத்துவ உதவியாளரும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



