அதிமுக சார்பில் சென்னையில் கிறிஸ்துமஸ் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விஜய்யின் ஈரோடு பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஈரோட்டில் விஜய் பேசிய போது, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பெயர்களைப் பயன்படுத்தி இருந்தார்.
மேலும், அதிமுக தலைவர்கள் குறிப்பிட்டது போல திமுகவைத் தீய சக்தி எனக் குறிப்பிட்ட விஜய், அந்தத் தீய சக்தியை வீழ்த்தவே தூய சக்தியாக தவெக வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், “பொதுவாக ஒரு கட்சிக்கு எனத் தனித்தன்மை இருக்க வேண்டும். ஆனால், தனித்தன்மை இல்லாதவர்கள் இப்போது பேசுகிறார்கள்.. எம்ஜிஆர் என்ற முகமூடியைப் போட்டு வந்தால் தான் மக்களைச் சந்திக்க முடிகிறது.
முகமூடி போட்டு வந்தால் தான் வாக்குகள் கிடைக்கும் என்றே நினைக்கிறார் விஜய். எம்ஜிஆர் முகமூடியைப் போட்டுக் கொண்டு வந்தாலும் சரி, ஜெயலலிதா முகமூடியை முகமூடியைப் போட்டுக் கொண்டு வந்தாலும் சரி, அண்ணா முகமூடியைப் போட்டுக் கொண்டு வந்தாலும் சரி.. அதிமுகவுக்கு வாக்களித்த கைகள் வேறு எந்த கைகளுக்கும் வாக்களிக்காது. விஜய்க்கு தனித்தன்மை இல்லாததால் எங்கள் தலைவர்களின் முகமூடியைப் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
ஊர்க் குருவி எவ்வளவு உயர உயரப் பறந்தாலும் பருந்தாகாது. களத்தில் இல்லை என அவர் அதிமுகவை குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், மறைமுகமாக அவர் எங்களைச் சொல்லி இருந்தால் அதற்கு நான் ஒன்றைச் சொல்கிறேன்.. முளைத்து மூன்று இலை விடாதவர்கள், ஆலமரமாக இருக்கும் அதிமுக இயக்கத்தை பற்றிப் பேசக்கூடாது. எத்தனையோ பேருக்கு அதிமுக நிழல் கொடுத்துள்ளது. அரசியல் அடிப்படைகளைப் படித்துவிட்டு வாருங்கள்” என்றார்.



