சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவருக்கு ஒரு பெண் குழந்தை(13) உள்ளது. விவாகரத்துக்கு பின்னர் சாந்தி வேறொரு நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னுடைய மகளுடன் வேலூரில் வசித்து வந்தார்.
இப்படியான நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்தியின் முதல் கணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவரைப் பார்த்துக் கொள்ள சாந்தி தன்னுடைய மகளை அவரது அத்தை வீட்டுக்கு, அதாவது முதல் கணவரின் தங்கை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அத்தை சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி ஈசிஆரில் உள்ள ஒரு வீட்டுக்கு வலுக்கட்டாயமாக சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் ஸ்ரீகண்டன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகும் சிறுமிக்கு ஆடை வாங்கி தருவதாக அழைத்து சென்ற அத்தை சிறுமியை மேலும் இரண்டு முறை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருக்கு இறையாக்கினார். அது மட்டுமல்லாமல் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதனால் சிறுமி தனக்கு நடந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறுமி அவருடைய பாட்டியின் துக்க நிகழ்வுக்கு கோடம்பாக்கத்திற்கு சென்ற போது அவருடைய அத்தை சொத்துக்காக வந்தியா என்று சிறுமியிடம் சண்டையிட்டுள்ளார். மேலும் உன்னை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ என்னிடம் இருக்கிறது அதனை சமூக ஊடகத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நடந்ததை தன் தாயிடம் கூறியுள்ளார். கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் உடனே போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் அத்தை மற்றும் ஸ்ரீ கண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவர் ஸ்ரீகண்டன் மீது ஏற்கனவே பல போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிபிட தக்கது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.