மராட்டியம் மாநிலம் போர்ஜூனி கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தை அடுத்து இளம்பெண்ணையும், அவரது காதலனையும் உறவினர்கள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போர்ஜூனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவானி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு அவர் தனது கணவருடன் அருகிலுள்ள கிராமத்தில் வசித்து வந்தார். ஆனால், அங்கே லகான் பண்டாரே என்ற இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் சஞ்சீவானியின் மாமியாருக்கு இந்த விவகாரம் தெரிய வந்தது. அதன் பிறகு அவர் தொடர்ந்து மருமகளின் நடத்தையை கண்காணித்து வந்தார். சம்பவத்தன்று, கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் சஞ்சீவானி அவரது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது மாமியார் கையும் களவுமாக பிடித்தார். அதைத்தொடர்ந்து உடனே சஞ்சீவானியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து அவசரமாக அங்கு வந்த சஞ்சீவானியின் தந்தை, தாத்தா மற்றும் உறவினர் ஒருவர், தங்கள் குடும்பப் பெண் கள்ளக்காதலனுடன் சிக்கியதை கண்டு அதிர்ச்சியடைந்ததோடு கடும் கோபமடைந்தனர். பின்னர் அந்த கள்ளக்காதல் ஜோடியையும் அங்கிருந்து அழைத்துச் சென்ற அவர்கள், வழியில் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், அவர்களின் கை, கால்களை கட்டிவிட்டு, ஈவு இரக்கமில்லாமல் அருகிலிருந்த கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தனர்.
சம்பவத்துக்குப் பிறகு, கிணற்றில் இரண்டு சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சஞ்சீவானி மற்றும் லகான் பண்டாரே ஆகியோரின் உடல்களை மீட்டனர். இதையடுத்து சஞ்சீவானியின் தந்தை, தாத்தா மற்றும் உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.