தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது 48 மணிநேரத்தில் மேலும் சற்று வலுவடையக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Read more: அதிமுக – திமுக சாதனைகள் குறித்து மேடை போட்டு பேச ரெடியா..? ஸ்டாலினுக்கு சவால் விட்ட EPS..!