‘நீதிமன்ற அவமதிப்பு’ வார்த்தையை கேட்டு பயந்த காலம் மலையேறிவிட்டது..! ஐகோர்ட் அதிருப்தி..!

chennai high court 11zon

நீதிமன்ற அவமதிப்பு என்ற வார்த்தையை கேட்டாலே நடுக்கம் ஏற்படும் காலம் மலையேறி விட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கால்நடை பராமரிப்புத் துறையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வரும் டாக்டர் செந்தில்குமார் என்பவரை, திண்டுக்கல்லில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடிக்குத் துறை நிர்வாகம் கடந்த 2025 ஜூன் மாதம் பணியிட மாற்றம் செய்தது. அடுத்த நான்கு மாதங்களிலேயே அவரை மீண்டும் தூத்துக்குடிக்கு மாற்றியதை எதிர்த்து, அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தப் பணியிட மாற்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இருப்பினும், நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரிகள், மருத்துவர் செந்தில்குமாரை மீண்டும் பணியில் இணைய அனுமதிக்கவில்லை. அதோடு, அவரது ஊதியத்தையும் விடுவிக்காமல் நிறுத்தி வைத்தனர். இதனால் பாதிக்கப்பட்ட மருத்துவர், நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கு விசாரணையின் போது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். கால்நடை பராமரிப்புத் துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தை மிகவும் அலட்சியமாக கையாண்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவு இருந்தும் மனுதாரரை மீண்டும் அதே பணியிடத்தில் அமர்த்தாதது பெரும் அதிருப்தி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் நீதிமன்றத்தின் கண்ணியம் அடங்கியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு உறுதுணையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டினார். உத்தரவை நடைமுறைப்படுத்த தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் நீதிமன்றத்தின் கண்ணியமே சீர்குலைவதாக கூறிய அவர், முன்பெல்லாம் அரிதாக இருந்த அவமதிப்பு வழக்குகள் இப்போது இயல்பாகிவிட்டதாகவும், நீதிமன்ற அவமதிப்பு என்ற வார்த்தையை கேட்டாலே நடுக்கம் ஏற்படும் காலம் மலையேறி விட்டதாக கூறினார்.

இத்தகைய சூழலில், உத்தரவை முழுமையாகச் செயல்படுத்துவது அல்லது அதற்குத் தகுந்த காரணங்களை அளிப்பது மட்டுமே அதிகாரிகளின் கடமை எனக் குறிப்பிட்ட நீதிபதி, இவ்வழக்கில் தொடர்புடைய கால்நடை பராமரிப்புத் துறையின் தற்போதைய இயக்குநர் எச்.கிருஷ்ண உன்னி மற்றும் முன்னாள் இயக்குநர் எஸ்.பி. அம்ரித் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்ப ஆணை பிறப்பித்தார்.

Read More : TN Budget | ஒரு ரூபாய் கணக்கு..!! தமிழக அரசுக்கு கிடைக்கும் வருமானமும்.. செலவுகளும்..!!

Next Post

முட்டையின் மஞ்சள் கரு உங்களுக்கு எமனா? முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர்கள்..!!

Thu Aug 6 , 2026
காலை உணவில் முட்டையை சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு நன்மையா அல்லது தீமையா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக, முட்டையின் மஞ்சள் கருவில் அதிகளவில் கொலஸ்ட்ரால் இருப்பதால், அதைச் சாப்பிடுவது இதயத்திற்கு ஆபத்து என்ற எண்ணம் மக்களிடையே ஆழமாகப் பதிந்துள்ளது. இதன் காரணமாகவே, உடல்நலத்தில் அதிக அக்கறை கொண்டவர்களும் முதியவர்களும் மஞ்சள் கருவைத் தவிர்த்துவிட்டு, வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த நம்பிக்கையை மறுபரிசீலனை […]
Egg 2026

You May Like