தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், இந்த அவகாசத்தை டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் வழங்குவது, அதை பூர்த்தி செய்து பெறுவது, மற்றும் பதிவு செய்யும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் டிசம்பர் 4-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படிவம் விநியோகம், பூர்த்தி செய்து திரும்ப பெறுவது போன்றவற்றில் சிக்கல்கள் எழுந்தது மற்றும் பருவமழை உள்ளிட்ட காரணங்களால், அவகாசத்தை நீட்டிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்று, எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், பிப்ரவரி 14-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எஸ்ஐஆர் படிவம் விநியோகம், பூர்த்திசெய்து சமர்ப்பித்தல், பதிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான அவகாசத்தை மேலும் 3 நாட்கள், அதாவது டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



