இந்தியாவில் பெண்களைத் துன்புறுத்தும் வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணை கொடுமையால் ஒரு பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் ரத்தம் புரி பகுதியை சேர்ந்த ஹமா (வயது 28) என்பவருக்கும், அனஸ் என்ற நபருக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ஹமாவின் பெற்றோர் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணையாக வழங்கியிருந்தனர்.
ஆனால், திருமணத்திற்குப் பிறகு கூடுதல் ரூ.5 லட்சம் வரதட்சணை வேண்டும் எனக் கூறி ஹமாவை கணவர் அனஸ், மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தினர் தொடர்ச்சியாக மனதளவில் மற்றும் உடல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். சம்பவத்தன்று மீண்டும் அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளன. ஒரு கட்டத்தில் கணவர் குடும்பத்தினர் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கினர்.
இந்த தாக்குதலில் ஹமா படுகாயம் அடைந்த நிலையில் வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர கொலையை அடுத்து, ஹமாவின் கணவர் அனஸ் உட்பட ஐந்து பேரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.
இவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம், இந்தியாவில் இன்னும் பல இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வரதட்சணை அடிமைத்தனத்தின் கொடூர முகத்தை எதிரொலிக்கிறது.